கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Saturday, 22 November 2014

பிறந்த நாள்

பெற்று வளர்த்து 
இனிய உறவாக
எனக்களித்த
பெற்றாருக்கு நன்றிகள்...

மாற்றான் தோட்டத்து
மல்லிகையின் காவலனே
மனந்திறந்து மண்டியிட்டு
கூறுகிறேன் வாழ்த்துக்கள்...

கண்மூடி கற்பனையில்
கணவனை வரைந்தேன்
களிப்படைந்தேன் காதலுடன்
காத்திருந்தேன் மனதுக்குள்...

மூன்று டஜன் ஆண்டுகள்
முடிந்த முத்தான இவ்வாண்டில்
மூவொரு தேவன் முன்னிறுத்தினான்
காதலின் உருவாய் கண்களுக்குள்...

உன்னை படைத்ததின்
நோக்கம் நிறைவேறியதாக
கரம் பிடித்து தந்துவிட்டு
ஆசிகளுடன் சென்றார் விண்ணுக்குள்...

கண்கள் கலக்கவிட்டு
வார்த்தைகள் பரிமாறி
கட்டுப்பாடான காதல்ரசம் விரவி
கலந்தோம் ஒன்றுடன் ஒன்றுக்குள்...

மன்னவனின் பிறந்தநாள்
இயற்கையே வாழ்த்தும்
இரக்கக்குணவானே என்னும்
வாழ்த்தொலி மேகங்களுக்குள்...

முத்துநகரின் துறைமுகமே
ஊர் போற்றும் உன் புகழ்
பார் அறியும் ஒரு நாள்
நனவாகும் கனவுகள் நிஜங்களாய்...

உறுதுணையாய் வழித்துணையாய்
ஊன்றுகோலாய் வடிகாலாய்
தாயாய் தாரமாய் தோழியாய் 
நட்பாய் என்றுமிருப்பேன் நம்பிக்கையாய்...

தலை நிமிர்ந்து தரணி எங்கும்
தடைகளை தகர்த்து தடம் பதிக்க
வரலாறு வரிசையிட்டு புகழ் பரப்ப
இறையருள் வேண்டி கூறுகிறேன் வாழ்த்துக்கள்...

வாழிய பல்லாண்டு!!

கண்ணீர்

கன்னங்கள் மட்டும்
முத்து விளையும்
சிப்பிகளாய் இருந்திருந்தால்
கணக்கிலடங்கா
முத்துக்கள்
விளைந்திருக்கும்...

நீ

நீ என்னிடம்
பேசும் வரை
நினைவுகளில்
நீங்காமலிருக்கிறாய்

பேசியதும்
நிஜத்திலும்
நீங்காமலிருக்க
துடிக்கிறது மனசு

Saturday, 8 November 2014

காத்திருந்த காதல்

வாரம் ஒரு முறை
என்றாய்...
வந்தது வாரமும்
பலமுறை!

மாதம் ஒரு முறை
என்றாய்...
முடிந்தது மாதமு‌ம்
இருமுறை!

அன்பின் ஆதார புள்ளி
ஆனாய்...
நொறுக்கப்பட்ட
சேதாரமானேன்!

வாழ்க்கையின் அச்சாணி
நீயானாய்...
உருட்டி விளையாடும்
சக்கரமானேன்!

தெற்கத்தி கள்வனே கலாபக்
காதலனே...
கள்வனின் காதலி
காத்திருக்கிறாள்!

Wednesday, 10 September 2014

அச்சாரம்

அறியா வயசு
ஆனந்தம் தான்
இனமறியா இன்பம்
ஈடுபாடில்லா சடங்குகள்
உருக்குலைந்த சுதந்திரம்
ஊக்கமருந்து அறிவுரைகள்
எதிர்பாரா முடிவுகள்
ஏமாற்றிய கனவுகள்
ஐநூறு பேரின் வாழ்த்துக்கள்
ஒரே நாளில் மாற்றங்கள்
ஓராயிரம் கேள்விகள்
ஔஷதமாகியது வாழ்க்கை

அன்று இதே நாளில். .....
செல்வியாக வலம் வந்த
என்னை திருமதி ஆக்க
அச்சாரமிட்ட நாள்!!

Sunday, 31 August 2014

காலங்களில் காதல்

ஒவ்வொரு நொடியும்
காத்திருந்தேன்
எதிர் பார்த்திருந்தேன்

நிமிடத்திற்கு பல முறை
நினைவிழந்தேன் உன்
நினைவில் விழுந்தேன்

மணிக்கு சில முறை
மகிழ்ந்திருந்தேன் உலகம்
மறந்திருந்தேன்

நாள் முழுவதும் நட்புடன்
கைக்கோர்த்திருப்பேன்
விட்டு பிரியாதிருப்பேன்

வருடம் பல கடந்தாலும்
வாழ்ந்திருப்பேன் நெஞ்சில்
 நிறைத்திருப்பேன்!!

Saturday, 2 August 2014

உறவு

காத்திருந்த உன்னை
காயப்படுத்திய கஷ்டம்

புரிதலில் முரண்பாடு
தன்னிலை தலைக்கனம்

விட்டுக் கொடுக்கிறது மனம்
அடம் பிடிக்கிறது நாவு

உன்னதமான உறவை
உடைய விடமாட்டேன்! !

Thursday, 31 July 2014

பாழாய் போன மனம்

முப்பொழுதும்
முகம் கொடுத்து
பேசாவிடினும்

நாலாறு மணி நேரமும்
நான் நீ என தன்னிலை
தக்க வைப்பினும்

ஊர் உறவு நட்புகளிடம்
பகிர்வதில் பாதி கூட
வார்த்தையாகாதிருப்பினும்

அரை நொடி பொழுது அகல
ஒரு பகல் பொழுது பிரிய
பரிதவிக்கிறது மனம்!!!

Wednesday, 30 July 2014

தேடலின் பரிசு

ஈரேழு ஆண்டு
இறுதியில்
தேடலின் பரிசு

அவன் அவளிடம்
இவளோ இவ்விடம்
திருவிளையாடல்

விளையாட்டில்
வெற்றி வாகை
படைத்தவருக்கு...!!

Monday, 28 April 2014

தாயுமானவன்

தாகத்திற்கு
தண்ணீர் தந்த
தங்க தாரகையே!

தாயை இழந்து
தந்தையுடன் தவிக்கும்
தமையனாம் எனக்கு

தனிமை விரட்ட
தாய் மண்ணை
துணையாக்கி

இருள் போக்க
இளஞ்சூரியனை
காவல் வைத்து

தேசத்திற்காக
தேகத்தைத் தர
துப்பாக்கியுடன்

தனை பிரியும்
தாயுமானவனாம்
தந்தையை

வழியனுப்பி
விழி ஈரத்துடன்
விதிப்படி வருவேன்!!

Wednesday, 2 April 2014

கதிரவன்


அடே கதிரவா
இளங்காலை
இளவரசனே!

உள்ளங்கைக்குள்
உலகத்தை
உருட்டி வைத்திருப்பவனே!

கடல் தாண்டியிருந்தாலும்
கட்டழகா நீ இருப்பது
கண்ணுக்கெட்டும் தூரமடா!

விளையாடும் பந்தை
வீசியெறிந்து விட்டு
விண் பந்தாம் உனை தொட்டேனடா!

எட்டா உயரம்
என மார்த்தட்டியவனே
எட்டிப் பிடித்தேனடா!

எழுச்சி மிகுந்த
என் எண்ணங்கள்
எகிறி பறக்குமடா!!!

Wednesday, 26 March 2014

காத்திருப்பு

காத்திருப்பு
எத்தனை சுகம்
உன் கைகளுக்குள்!

தலை சாய
தன் மடி தந்து
தாய்மையை தந்தாய்!

கரம் கோர்த்து
பயம் போக்கி
தந்தையாய் நின்றாய்!

உனக்குள்
என்னை அடக்கி
யாதுமாகி கணவனானாய்!

கட்டி அணைத்து
மூச்சுக் காற்றால்
காதல் நேசம் தந்தாய்!

கருவறை முதல்
பள்ளியறை வரை
வாழ்ந்தேன் நானாய்!

பள்ளியறை முதல்
கல்லறை வரை
வந்துவிட்டேன் உனக்காய்!

சுகம் தான்
அன்பு காதல் நிறைந்த
காத்திருப்பு உன் கைகளுக்குள்!!

Saturday, 8 March 2014

பெண்மை

காற்றுக் கூட புகா
கருவறை திறந்து
கண் கண்ட
முதல் தெய்வமாய்!

வெளி உலகம்
விளங்கா வயதில்
விரல் பிடித்து வந்த
சகோதரி எனும் வரமாய்!

அறிவு உலகில்
ஆற்றல் படைக்க
அனைத்துலகும் அறிய
ஆசிரியை எனும் வழிகாட்டியாய்!

பருவ வயதில்
சுமைகளையும் சோகங்களையும்
சுகங்களாக மாற்றிய
தோழி எனும் ஊன்றுகோலாய்!

மண வயதில்மனம் புகுந்து
மணி விழா காணும் வரை
ஊண் உயிரில் பாதியாகிய
மனைவி எனும் மறுதாயாய்!

நாடி நரம்பு நடுங்கும்
நாட்களை நகர்த்தும் நாளில்
மாயமாய் மனதிற்கு மருந்திடும்
மகள் எனும் மந்திரமாய்!

மங்கை, மகளிர்
மகத்துவமான பரிணாமங்கள்
அத்துனையும் அனைவர் வாழ்விலும்

வாழ்க பெண்மை!!

Monday, 27 January 2014

காதல் பரிசு

"அன்பே! ஆருயிரே!!"
என வார்த்தைகளால்
வர்ணிக்க முடியா

"நன்றி" என்று
வார்த்தை ஒன்றுடன்
நிறுத்த முடியா

"என்னில் பாதி"
"ஈருடல் ஓருயிர்" என
பிரிக்க முடியா

என்னுடன் ஐக்கியமாகி
எனக்கு எல்லாமுமாகி
ஆண்டு ஈராறை
கடக்கும் இந்நாளில்
என் காதல் பரிசு!!

பெற்றோருக்கு....

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

வள்ளுவனின்
இல்லறவியல்
இனிய வரிகளுக்கிணங்க

இல்லறத்தை நல்லறமாக்கி
பெற்றோரின் வழியில்
பெற்றாரை வளர்த்து

தன்னுள் அன்புகொண்டு
மற்றோரிடம் அறம் வளர்த்து
எளிமை கோலம் கொண்டு

பாதச் சுவடுகளால்
பாதை வகுத்து கொடுக்கும்
அம்மையப்பனாம் - எங்கள்

அன்னை தந்தையின்
பாதங்களை சிரம் ஏற்று
வணங்கி நிற்கும்
வழித்தோன்றல்கள் !!

வாழ்த்து மடல்

யாருக்கு யார்
சொந்தமாவதென்று
வந்து சொல்வதில்லை
தேவதைகள்....

உறவுகள் சேர்த்து
வைத்த உங்களை
வாழ்த்தட்டும் வந்து
அந்த தேவதைகள்!

யாருக்கு மாலைகள்
ஆவதென்று
பூப்பதில்லை பூக்கள்
பூங்கொடிகளில்....

உங்களின் தோள்களில்
விழும்போது தான்
அக்களிக்கின்றன பூமாலைகளாகிறோம்
பூக்களுக்கே என்று!!

இனிதே தொடரும் உங்கள்
இல்லற பயணம் முடிவிலா
இன்ப பயணமாக
தொடர விரும்பும் மனம்.....