கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Tuesday, 21 June 2016

நாவின் மொழி

சிதறிய கடல்த்துளி அல்ல
நாவின் மொழி
சிப்பியில் முத்தாக.....

இலக்கு

நாணிலிருந்து
விடுபட்ட
அம்பாயிரு
தடைகளைக்
கிழித்து
தடம்பதி
இலக்கு
இந்திரலோகமாயினும்....

கச்சேரி

அரிதாரம் பூசாமல்
தினம் ஒரு பாத்திரம்
ரசிகர்கள் ரசனை இல்லா
நாடகக் கச்சேரி...

மன புற்று

நேற்றைய கவலை
இன்றைய பயம்
நாளைய எதிர்பார்ப்பு
மனதின் புற்றுநோய்....

நாகரீகம்

நான்கு சுவருக்குள்
இருந்து வந்தது
நடுத்தெரு வந்தது
நாகரீக முன்னேற்றம்...

களையெடுப்பு

வெண் புரவி
இடுப்பில் வாள்
எதிரிகளுக்கல்ல
புல்லுருவிகளுக்கு
கோடாரி காம்புகளுக்கு....

Monday, 20 June 2016

வாங்கி வந்த வரம்

அச்சு வார்ப்பில்
மகனாகாவிடினும்
தலை மகளானேன்...

நல்ல நாடக கலைஞர்
எப்போதும் ஹீரோ
பாத்திரத்தின் பாக்கியம்...

சிக்கென்ற உடல்வாகு
பளுத்தூக்கல் உடற்பயிற்சி,
கபடி பேர் சொன்னது...

தரம் பிரிவின் மேலாளர்
மருத்துவமனை மேலாளர்
மதிப்புமிகு பதவிகள்...

சொந்த தொழில்
அரசியல் சேவை
ஆன்மீக வழியானது...

நடை உடை பாவனை
பிரமிக்க வைத்தவை
பின்பற்ற தூண்டியவை...

தந்தை ஒற்றை சொல்
அகராதியில் இல்லா
அர்த்தமுள்ள மந்திரச் சொல்...

அறியாமல் விட்ட அன்பு
செய்ய மறந்த கடமைகள்
பயம் மறந்து நெருங்கி வாழ...

வரம் வேண்டுகிறேன்
இனியும் பிறப்பிருப்பின்
தந்தை மகளாகவே.....

Wednesday, 15 June 2016

பயண தூரம்

பயணப்பட வேண்டிய
தூரமும் நேரமும் மிகுதி
ஏணிகளை கண்டறி
சர்ப்பங்களுக்கு சங்கூது!

வாடகை வாழ்க்கை

தொப்புள் கொடியுடன் வந்து
அரைஞாண் கொடி கூட
சொந்தமாகக் கொண்டு
செல்ல இயலா
வாடகை வாழ்க்கை...

மனம் கொத்தி பறவை

காற்றில் கிழிந்த
வாழை இலையாய்
மனம்
கொத்தி பறவை....

உள்ளத் திருட்டு

திருடுவதில் தான்
எத்தனை சுகம்
கண்களுக்குள் பயணித்து
உயிரைத் தொட்டு
உள்ளத்தை எடுப்பது...

மன ஆரோக்கியம்

மனக் கழிவுகளை
அன்றன்றைக்கே
அகற்றிவிடுதல்
மன ஆரோக்கியம்....

ஏழாம் அறிவு

ஏமாற்றப்படுகிறோம்
என்ற உள்ளுணர்வு
ஏழாம் அறிவை
தட்டி எழுப்பி விடுகிறது....

நிழல்

மரத்தில் இருந்து
உதிர்வது
இலைகள் மட்டுமல்ல
நிழல்களும் தான்....

Sunday, 12 June 2016

காலம் கடந்த காதல்

மூவேழு வயதில்
வாலிப வனப்பில்
காளைப் பருவத்தில்
திருமணம்...

அன்றாட நிகழ்ச்சியானது;
பெற்றோருக்கு துணையானாள்;
கரம் பிடித்த மங்கையின்
மனம் அறியவில்லை...

பெற்றெடுத்த ஒரே மகனை
குறை கூறா பெற்றோர்
மருமகளை மகளாக பாவித்தாலும்
மனைவி அந்தஸ்திற்காக போராடினாள்...

பூ வாங்கி தந்ததில்லை
பொட்டு வைத்து விட்டதில்லை
சாப்பிட்டாளா கவலையில்லை
அருகில் அமர்ந்து பேசியதில்லை...

காலத்தின் கட்டாயம்
காமத்தின் பசியாற்றல்
தந்தையானேன் ஐவருக்கு
குறையவில்லை வெட்டி பந்தா...

நிரந்தர வேலையில்லை
மனைவி குழந்தை கவலையில்லை
பெற்ற கடனுக்கு சோறிட்டனர்
பெற்றோர் அறுவருக்கும்...

முதல் இரு திருமணம்
கடன் சண்டை சலிப்பு
ஊர் மெச்ச உற்றார் புகழ
நிறைவேற்றிய பெருமிதம்...

அடுத்து இரு திருமணம்
மூத்த பிள்ளைகளின் அனுசரணை
என் உள்ளத்தில் மாறுதல்
கடவுளின் கருணையால்...

ஏக புதல்வன்
வெறி கொண்டு படித்து
கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து
தானே வேலை அமர்ந்தான்...

கடமையாற்றிய களைப்பு
வயோதிக தாக்கம்
அனுசரணையாய் அமைதியாய்
ஏங்கி நின்ற மனைவி தெரிந்தாள்...

நாற்பது வருடங்கள்
துணை நின்றவள்
ஏதாவது செய்ய வேண்டும்
காலம் கடந்த காதல்....

Saturday, 11 June 2016

தடம்

கஷ்டங்களும் கவலைகளும்
துன்பங்களும் துயரங்களும்
ஒரு மனிதனுக்கு
எது எது செய்ய வேண்டும்
என்பதை விட
எவை எவை செய்யக் கூடாது
என்பதை ஆழமாக தடம்
பதித்து செல்கின்றன.....

மகிழ்ந்திரு

நாலாறு மணி நேரமே
வாழும் மலரே,
விரிந்து சந்தோஷமாக
வாழும் போது. ...
நாம் ஏன் முப்பொழுதும்
சந்தோஷமாக
வாழக்கூடாது. ...?

ஓடுகிறாயா

யாருக்காக ஓடுகிறீர்கள்
குடும்பத்திற்காக.....?

திரும்பி பார்
உன்னை விட
வேகமாக ஓடும்
நேரத்திடம் கேள்
எத்தனை மணி நேரம்
குடும்பத்திற்காக
செலவழித்தாய். ..

தப்பு

தப்பு என்று தெரிந்தும்
தவறு என அறிந்தும்
மனசாட்சிக்கு
மரியாதையுடன்
விளக்கம் அளித்து
மண்டியிட்டு
செய்யும் செயல்
மறக்க இயலா
நம் ஆயுளில்!

வார்த்தை

வார்த்தை வலியது
வல்லமை வாய்ந்தது

ஆத்திகனை நாத்திகனாக்கும்
நாத்திகனை ஆத்திகனாக்கும்

மதியை மயக்க செய்யும்
மூளையை சலவை செய்யும்

அரசனை அடிமை ஆக்கும்
ஆண்டியை ஆள வைக்கும்

மரணத்திற்கும் அடிகோலும்
மருந்திட்டும் புண்ணாற்றும்

வறுமைக்கும் வித்திடும்
வாழவும் வழி வகுக்கும்

வார்த்தைக்கு வசப்படுவோம்
முலாம் பூசாத வார்த்தைக்கு!!

அருமருந்து

என்னைக் கொல்ல
வந்த உயிர்க்கொல்லி
நோயும் நீ...
மனம் அறிந்து
குணமாக்கும்
அருமருந்தும் நீ!

கானல் நினைவலை

தூரத்திலோ, கூட்டத்திலோ
எங்கேனும் போட்டாவிலோ
புரொபைல் பிக்ஸரிலோ
பார்த்ததும்
பழகிய பேசிய உணர்வு
நீண்ட நாள் கூடவே இருந்த
கானல் நினைவலைகள்
பேசி பழக எத்தனித்தவர் சிலர்
ரகசியமாக ரசித்தவர் பலர்
பலரிலும் நானுண்டு
சிலரிலும் நானுண்டு!

தேடி வந்தால்

நாமாக தேடித் தேடி
நாடி நாடி ஓடி ஓடி
கிடைக்கப்பெறும் எதுவும்;
தாமாக நாடி ஓடித்
தேடி வந்தால் அதன்
சுவையும் மதிப்பும்
தனி தான்... பாசம் உட்பட...

மெழுகு மனம்

மனம் ஒரு மெழுகு....
உடைபட்டு உருகும் போது
ஆறுதல் வார்த்தைகள்
குளிர்வித்து வார்ப்பிக்கின்றன.

வெளிப்படுத்தா அன்பு

வெளிப்படுத்தா அன்பு
உள்ளத்தை ஊடுறுவினாலும்
வெளிப்படுத்திய பின்
உதாசீனப்படுத்தப் படும்போது
உள்ளம் உயிருடன் ஊசலாடுகிறது...

வேலை

மூளையால் வேலை
செய்பும் போது
நிதானமாகவும்
அலட்டிக் கொள்ளாமலும்
இருத்தல் அவசியம்
இல்லையேல்
மூலையில் உட்கார
வேண்டியது தான்...

மௌனம்

மனதில் மையம்
கொண்டிருந்த
எண்ணங்கள்
கரை கடந்து விட்டதால்
சலனம் எழ
மௌனம் சம்மணமிட்டது...

சங்கட பரிசு

இமைகள் மூடினேன்
கரித்தது கந்தகமாய்

எச்சில் விழுங்கினேன்
எரிந்தது எரிமலையாய்

காற்றை சுவாசித்தேன்
தடுத்தது அரிப்பாய்

தலையை அசைத்தேன்
பாறையின் பாரமாய்

சளியின் அன்பால்
சங்கட பரிசுகள்!!!

பேச்சு

முலாம் பூசிய
முகஸ்துதியை விட
பட்டர் தடவிய
ஏமாற்று பேச்சை விட
கண்டிப்புடன் கூடிய
கண்ணிய பேச்சே
நம்பத்தகுந்தது...

நீ வேண்டும்

கடைசிவரை நீ வேண்டும்
கரம் விட்டு சென்று விடாதே...
உன் கரம் பிடிக்காமல்
உன் பின்னால் வரத் தெரியாதே!

எழுத முடியா கவிதை

அதிகாலை ஞாயிறு
இருள் விலகா விடியல்
உன்னதமான உணர்வு
எழுத முடியா கவிதை நீ!

கோழிக்குஞ்சு

மெல்லினதேச ஸ்பரிசம்
ஜில்லிடும் நாசிக்காற்று
முட்டைக் கூட்டிற்க்குள்
ஒடுங்கும் கோழிக்குஞ்சாய்.....

மருந்தாகு

மனதை வருடியது மென்காற்று
மையல் கொண்டது மனம்
அறிவாயோ மருகும் நினைவுகளை
மருந்தாகு மனமிருந்தால்...

சுயநலம்

நீ நான்
உனது எனது
உனக்கு எனக்கு
மாற்றியமைத்துவிட்டேன்
நாம் நமது நமக்கு என்று....

சரியா? தவறா?

சரியா? தவறா?
அவரவர் அகராதியில்
ஆயிரம் அர்த்தங்கள்
குற்றம் இல்லாதவன்
கல்லெறியட்டும்!

முத்து

முங்காமல் மூழ்காமல்
முத்துக்குளிக்காமல்
கிடைக்கப்பெற்றேன்
அன்பில் அவன்....

அகப்பார்வை

நிலவொளியில் தூரமாய் உன் முகம்
தெளிவாய் காண அடி எடுத்து வைக்கிறேன்
கருவிழியின் அகப்பார்வையில்.....

தோழன் ஜாக்கிரதை

தோல்விகளே புறமுதுகிடு
தோழன் புறப்பட்டுவிட்டான்!

எள்ளி நகையாடியவரே
எழுந்து தூரமாகுங்கள்
எரிமலை எரித்துவிடுவான்!

முதுகில் குத்திய பேடிகளே
முகங்காணா ஓடிவிடுங்கள்
மார்பில் வெற்றிக்கொடி ஊன்றி
மரணத்தை காட்டிவிடுவான்!

அழகிய ஆண்ட்ராய்டு

கருவிழியில் படம் பிடித்து
மனதில் எடிட் செய்து
இதயத்தில் ஸ்டோர் செய்தான்;

சந்தேக வைரஸை தடுக்க
நம்பிக்கை அன்டிவைரஸ்
இன்ஸ்டால் செய்துவிட்டான்;

அழகிய ஆண்ட்ராய்டு அவன்!

தரைதட்டிய கப்பல்

இமைச் சிமிழுனுள்
மின்னும் பிரகாசமே!
கருப்பு ஜாதி வைரமே!
புருவ வில்லின் அம்பே!
தமிழை விஞ்சிய மொழியே!
உன்
ஆழமான அன்பான ஒளியால்
தரைதட்டிய கப்பல் நான்....

அன்பின் தூரம்

அன்பின் ஆழம்
அறிந்த அளவிற்கு
அன்பின் தூரம்
அறியமுடியவில்லை...

நீங்கிடு

அருகில் நீ
எதிரில் நீ
விழியில் நீ
இமை மூடினால் நீ
தற்காலிகமாகவேனும்
நினைவை விட்டு
நீங்கிவிடேன்......

தொடரும் எதிர்பார்ப்பு

பலமுறை ஏமாற்றம்
எட்டிக்காயாய் கசந்தாலும்
பதியவில்லை மனதில்
எதிர்பார்ப்பு தொடர்கிறது....

வாழ்க்கை ஆசிரியர்கள்

அனுபத்தால் கற்கிறோம்
நல்லதோ கெட்டதோ
தினம் தினம் வாழ்க்கையில்
ஏராளமான ஆசிரியர்கள்....

திமிர்

உன் மனதை
வென்ற மகிழ்ச்சி
அதிலும் முழுமையாக
வென்ற திமிர்
திமிர்பிடித்தவள்....

படையெடுப்பு

உன் ஒற்றைச் சொல்
படையெடுப்பிற்கு பின்
சிதைந்து கிடக்கிறது
நினைவுகளால் மனம்....