கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Saturday, 2 September 2017

உறவாய் நீ

அருகில் நீ இல்லையெனில்
அதிகமாய் எண்ண தூண்டுகிறாய்

ஆதவன் பிரகாசமாய் ஒளியூட்டி
ஆணவத்தை இதமாய் சுட்டெரிக்கிறாய்

இந்திரலோகத்து இந்தியனாய்
இம்சையால் இன்முகம் சுண்டுகிறாய்

ஈரப்பத மென்காற்று பட்டதென
ஈரிதழ் ஸ்பரிசத்தால் சிலிர்க்கிறாய்

உலக கடைக்கோடியில் இருப்பினும்
உன்னதமாய் உன்னை உணர செய்கிறாய்

ஊசி முனையேனும் நான் சோர்ந்து போயின்
ஊக்கமருந்தாய் உற்சாக படுத்துகிறாய்

என்னவள் என மார்தட்டி மண்டியிட்டு
எனக்கானவன் என்பதை ஆழப்பதிக்கிறாய்

ஏக்கத்துடன் தற்காலிக பிரிவெனினும்
ஏறிட்டு முகம் காண கலங்குகிறாய்

ஐம்பதை நெருங்கிடினும் அழகாய்
ஐம்புலன் கொண்டு காதலிக்கிறாய்

ஒவ்வொருவருக்காகவும் விட்டுக்கொடுக்கும் நீ
ஒருபோதும் என்னை விட்டு கொடுக்க மறுக்கிறாய்

ஓட்டப்பந்தய உலக வாழ்க்கையில் உன்னுடன்
ஓர் ஜென்மம் போதாதென்று நினைக்க வைத்தாய்

இஃதோடு நிறுத்தி விட்டிடினும்
அஃதோடு முடிவதில்லை நம் உறவு....

Wednesday, 19 July 2017

என்னவன்

அன்பில் அவன்
ஆருயிர் தோழன்
இதயத் திருடன்
ஈர நெஞ்சன்
உறுதி தோளன்
ஊக்க மருந்தன்
எழுச்சி நாயகன்
ஏந்தல் வேந்தன்
ஐங்கணை மன்மதன்
ஒப்பிலா குணவான்
ஓவிய வடிவோன்
ஔபத்திய காதலன்
அஃதகையோன்
என்னவன்...

Sunday, 18 June 2017

காவியக் காதல்

நெற்கட்டும் செவலின்
வீர மறக்குல வாரிசே
நெஞ்சம் நிமிர்த்தி
மஞ்சம் அழைப்பாயோ...

மஞ்சம் தனில்
தஞ்சம் ஆனதும்
மங்கை இவள்
மையல் கொண்டனளே...

வாள் பிடித்த கரங்கள்
வஞ்சியின் இடை பிடித்தனவே
திமில் கொண்ட தோள்கள்
திருமகளின் தூளியானதே...

பரந்த மார்பில் கூந்தல் பரப்பி
மாவீரனின் மாலையாயினளே
கூடு விட்டு கூடு பாய்ந்து
ஈருடல் ஓருயிர் ஆயினரே...

Saturday, 18 February 2017

வண்ணமில்லா எழுத்தாணி

வறுமை வழி அனுப்ப
வசந்தம் வாசல் தாண்ட
வண்ணமில்லா எழுத்தாணியால்
வடிக்கப்பட்ட வாழ்க்கை
வசையான முதிர்கன்னி பட்டம்
வண்ண மை தட்டுப்பாடு...

         
        

Sunday, 12 February 2017

ஒரு பூவின் கோபம்

மாமன் சீர் கொணர
மண்மணம் மாறா
மஞ்சள் நீராட்டு...

எதிர்வீட்டு சாளரத்தில்
எட்ட நின்று எண்ணிலா
எண்ண ஓட்டம்...

மூவேழு வருடமாயும்
மாமன் கட்ட இயலா
பச்சை ஓலைக்காய் ஏக்கம்...

மங்கையா? மடந்தையா?
அரிவையா? அறியவில்லை
மனதினுள் மறையா போராட்டம்...

கல்லறையான கருவறை
சந்தடி இல்லாமல்
சந்ததி அஸ்தமனம்...

பாவமா? சாபமா?
இல்லை கோபமா?
பூப்பெய்தா பூவாய்...