கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Monday, 14 December 2020

தபீதா

கண்டதும் காதலா

இருக்கலாம்..

ரசித்தேன்; சுவாசித்தேன்...


காணும் நிமிடங்களை

காட்டிலும் 

காணா மணிப்பொழுது

காதலில் கரைந்தேன்...


இம்சிக்கும் இனிமையான

இன்ப உணர்வு...


தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும்

தொடர பயந்த அந்தஸ்து இடைவெளி...


மனதிற்குள் மாளிகை

மன்னவனுக்கு மஞ்சம்

குடும்பம் குழந்தை

பெயரிட்டேன் தபீதா...


கற்பனை வாழ்க்கை

காற்றில் கரைய

காத்திருப்புக்கு பரிசு

உணர்வில் கலந்து

உறவில் இணைந்தேன்...


ஊடல் இருப்பினும்

கூடலில்  கலந்து

ஆதர்ச தம்பதியராய்

அனுதினமும் அன்புடன்

கடவுள் ஆசியுடன்...


*#Gifted*

Saturday, 2 September 2017

உறவாய் நீ

அருகில் நீ இல்லையெனில்
அதிகமாய் எண்ண தூண்டுகிறாய்

ஆதவன் பிரகாசமாய் ஒளியூட்டி
ஆணவத்தை இதமாய் சுட்டெரிக்கிறாய்

இந்திரலோகத்து இந்தியனாய்
இம்சையால் இன்முகம் சுண்டுகிறாய்

ஈரப்பத மென்காற்று பட்டதென
ஈரிதழ் ஸ்பரிசத்தால் சிலிர்க்கிறாய்

உலக கடைக்கோடியில் இருப்பினும்
உன்னதமாய் உன்னை உணர செய்கிறாய்

ஊசி முனையேனும் நான் சோர்ந்து போயின்
ஊக்கமருந்தாய் உற்சாக படுத்துகிறாய்

என்னவள் என மார்தட்டி மண்டியிட்டு
எனக்கானவன் என்பதை ஆழப்பதிக்கிறாய்

ஏக்கத்துடன் தற்காலிக பிரிவெனினும்
ஏறிட்டு முகம் காண கலங்குகிறாய்

ஐம்பதை நெருங்கிடினும் அழகாய்
ஐம்புலன் கொண்டு காதலிக்கிறாய்

ஒவ்வொருவருக்காகவும் விட்டுக்கொடுக்கும் நீ
ஒருபோதும் என்னை விட்டு கொடுக்க மறுக்கிறாய்

ஓட்டப்பந்தய உலக வாழ்க்கையில் உன்னுடன்
ஓர் ஜென்மம் போதாதென்று நினைக்க வைத்தாய்

இஃதோடு நிறுத்தி விட்டிடினும்
அஃதோடு முடிவதில்லை நம் உறவு....

Wednesday, 19 July 2017

என்னவன்

அன்பில் அவன்
ஆருயிர் தோழன்
இதயத் திருடன்
ஈர நெஞ்சன்
உறுதி தோளன்
ஊக்க மருந்தன்
எழுச்சி நாயகன்
ஏந்தல் வேந்தன்
ஐங்கணை மன்மதன்
ஒப்பிலா குணவான்
ஓவிய வடிவோன்
ஔபத்திய காதலன்
அஃதகையோன்
என்னவன்...

Sunday, 18 June 2017

காவியக் காதல்

நெற்கட்டும் செவலின்
வீர மறக்குல வாரிசே
நெஞ்சம் நிமிர்த்தி
மஞ்சம் அழைப்பாயோ...

மஞ்சம் தனில்
தஞ்சம் ஆனதும்
மங்கை இவள்
மையல் கொண்டனளே...

வாள் பிடித்த கரங்கள்
வஞ்சியின் இடை பிடித்தனவே
திமில் கொண்ட தோள்கள்
திருமகளின் தூளியானதே...

பரந்த மார்பில் கூந்தல் பரப்பி
மாவீரனின் மாலையாயினளே
கூடு விட்டு கூடு பாய்ந்து
ஈருடல் ஓருயிர் ஆயினரே...

Saturday, 18 February 2017

வண்ணமில்லா எழுத்தாணி

வறுமை வழி அனுப்ப
வசந்தம் வாசல் தாண்ட
வண்ணமில்லா எழுத்தாணியால்
வடிக்கப்பட்ட வாழ்க்கை
வசையான முதிர்கன்னி பட்டம்
வண்ண மை தட்டுப்பாடு...

         
        

Sunday, 12 February 2017

ஒரு பூவின் கோபம்

மாமன் சீர் கொணர
மண்மணம் மாறா
மஞ்சள் நீராட்டு...

எதிர்வீட்டு சாளரத்தில்
எட்ட நின்று எண்ணிலா
எண்ண ஓட்டம்...

மூவேழு வருடமாயும்
மாமன் கட்ட இயலா
பச்சை ஓலைக்காய் ஏக்கம்...

மங்கையா? மடந்தையா?
அரிவையா? அறியவில்லை
மனதினுள் மறையா போராட்டம்...

கல்லறையான கருவறை
சந்தடி இல்லாமல்
சந்ததி அஸ்தமனம்...

பாவமா? சாபமா?
இல்லை கோபமா?
பூப்பெய்தா பூவாய்...

        

Tuesday, 21 June 2016

நாவின் மொழி

சிதறிய கடல்த்துளி அல்ல
நாவின் மொழி
சிப்பியில் முத்தாக.....

இலக்கு

நாணிலிருந்து
விடுபட்ட
அம்பாயிரு
தடைகளைக்
கிழித்து
தடம்பதி
இலக்கு
இந்திரலோகமாயினும்....

கச்சேரி

அரிதாரம் பூசாமல்
தினம் ஒரு பாத்திரம்
ரசிகர்கள் ரசனை இல்லா
நாடகக் கச்சேரி...

மன புற்று

நேற்றைய கவலை
இன்றைய பயம்
நாளைய எதிர்பார்ப்பு
மனதின் புற்றுநோய்....

நாகரீகம்

நான்கு சுவருக்குள்
இருந்து வந்தது
நடுத்தெரு வந்தது
நாகரீக முன்னேற்றம்...

களையெடுப்பு

வெண் புரவி
இடுப்பில் வாள்
எதிரிகளுக்கல்ல
புல்லுருவிகளுக்கு
கோடாரி காம்புகளுக்கு....

Monday, 20 June 2016

வாங்கி வந்த வரம்

அச்சு வார்ப்பில்
மகனாகாவிடினும்
தலை மகளானேன்...

நல்ல நாடக கலைஞர்
எப்போதும் ஹீரோ
பாத்திரத்தின் பாக்கியம்...

சிக்கென்ற உடல்வாகு
பளுத்தூக்கல் உடற்பயிற்சி,
கபடி பேர் சொன்னது...

தரம் பிரிவின் மேலாளர்
மருத்துவமனை மேலாளர்
மதிப்புமிகு பதவிகள்...

சொந்த தொழில்
அரசியல் சேவை
ஆன்மீக வழியானது...

நடை உடை பாவனை
பிரமிக்க வைத்தவை
பின்பற்ற தூண்டியவை...

தந்தை ஒற்றை சொல்
அகராதியில் இல்லா
அர்த்தமுள்ள மந்திரச் சொல்...

அறியாமல் விட்ட அன்பு
செய்ய மறந்த கடமைகள்
பயம் மறந்து நெருங்கி வாழ...

வரம் வேண்டுகிறேன்
இனியும் பிறப்பிருப்பின்
தந்தை மகளாகவே.....

Wednesday, 15 June 2016

பயண தூரம்

பயணப்பட வேண்டிய
தூரமும் நேரமும் மிகுதி
ஏணிகளை கண்டறி
சர்ப்பங்களுக்கு சங்கூது!

வாடகை வாழ்க்கை

தொப்புள் கொடியுடன் வந்து
அரைஞாண் கொடி கூட
சொந்தமாகக் கொண்டு
செல்ல இயலா
வாடகை வாழ்க்கை...

மனம் கொத்தி பறவை

காற்றில் கிழிந்த
வாழை இலையாய்
மனம்
கொத்தி பறவை....

உள்ளத் திருட்டு

திருடுவதில் தான்
எத்தனை சுகம்
கண்களுக்குள் பயணித்து
உயிரைத் தொட்டு
உள்ளத்தை எடுப்பது...

மன ஆரோக்கியம்

மனக் கழிவுகளை
அன்றன்றைக்கே
அகற்றிவிடுதல்
மன ஆரோக்கியம்....

ஏழாம் அறிவு

ஏமாற்றப்படுகிறோம்
என்ற உள்ளுணர்வு
ஏழாம் அறிவை
தட்டி எழுப்பி விடுகிறது....

நிழல்

மரத்தில் இருந்து
உதிர்வது
இலைகள் மட்டுமல்ல
நிழல்களும் தான்....